’தொலைவிலுணர்தல்’ என்பது ஐம்புலன்களுக்கும் எட்டாத் தொலைவிலுள்ள பொருள்கள் உயிர்கள் பொருணிகழ்ச்சிகள் உயிர் நிகழ்ச்சிகளை மக்களாகிய நாம் நமதுள்ளத்தால் உணரப் பெறுதலேயாகும். ஐம்புலன்களின் வாயிலாகவன்றி எதனையும் உணரமாட்டாத எளிய நிலையில் நிற்கும் நாம், அவ்வைம் புலன்களுக்கும் எட்டாத இடத்திலுங் காலத்திலும் உள்ள பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் ஒரோ வொருகாற் கனவிலும் நம் அகக்கண்ணெதிரே சடுதியிற் கண்டு, அங்ஙனங் கண்டபடியே பின்னர்ப் புறக்கண்ணெதிரேயும் அவை தோன்றக் கண்டால் அப்போது நாம் எவ்வளவு இறும்பூதெய்துகின்றோம்! கனவிலோ நனவிலோ நாம் நம் அகக்கண்ணாற்கண்டு நினைவுற்ற ஓரிடத்தே அங்ஙனங் கண்டபடியே சிறிதும் பிசகாது நமது புறக்கண்ணேதிரேயுங் காணநேருங்கால் அப்போது நாம் எவ்வளவு வியப்புறுகின்றோம்! இன்னும் நமக்கு இனியராயினார் ஒருவரைப்பற்றி நாம் ஆழ்ந்து நினைந்து கொண்டிருக்கையில், அவர் நமக்கெதிரே வந்தாலும், அல்லாதவரிடமிருந்து எதிர் பாராமலே ஒரு கடிதம் வந்தாலும் அப்போதும் நாம் எவ்வளவு வியப்பினை அடைகின்றோம்!