உலகம் இயற்கைவழி இயங்கவே அமைந்தது. இயற்கைச் செந்நெறி நல்வாழ்வைக் கூட்டும். அந்நெறியினின்றும் வழுவ வழுவ மாசுகள் வாழ்விடைப் புகும். மாசுகள் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு விதமாக நின்று, மன்பதையின் ஆக்கத்துக்குக் கேடு சூழ்ந்து கொண்டிருக்கும். நமது நாட்டிலும் பலதிற மாசுகள் புகுந்து நாட்டைக் குலைத்து வரல் கண்கூடு. அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன: பிறப்பு வழி உயர்வு தாழ்வு கருதல், மக்களுள் தீண்டாமை கொண்டொழுகல், பெண்ணை அடிமைப்படுத்தல், கண்மூடி வழக்க ஒழுக்கங்களை உடும்பெனப் பற்றிக் கிடத்தல் முதலியன. இக் கறைகளும் நாட்டை அடிமைக்குழியில் வீழ்த்தியிருக் கின்றன என்று நம்புவோருள் யானும் ஒருவன். அந்நம்பிக்கையி னால் நாட்டின் விடுதலை முயற்சியில் யான் தலைப்பட்ட நாள் தொட்டுச் சீர்திருத்த முறைகளையும் அம்முயற்சியுடன் புகுத்திப் பேசியும் எழுதியும் வருகிறேன். இது நாட்டவர்க்குத் தெரிந்த தொன்றே.