முழுமுதற் பொருளைப் பெண் ஆண் என்றும், தாய் தந்தை என்றும் கொள்வதால், அதற்குத் திண்ணிய உறுப்புக்களுண்டு என்று எவருங் கருதலாகாது. அப்பொருளின் பெண்மையும் ஆண்மையும், திண்ணிய உறுப்புக்களையுடைய பெண் ஆண் வடிவங்களை உணர்த்துவன அல்ல. அவை நுண்ணிய சக்திகளை உணர்த்துவனவாம். புராணங்கள் அவைகளைத் திண்ணிய வடிவங்களாகக் கொண்டு திருமணப் படலங்களும் வகுத்திருக் கின்றன. அறிவால் கூர்ந்து உணரத்தக்க சில நுண்மைகள், மனத்திற் பொருளாகுமாறு அவற்றை உருவகப்படுத்திக் கதைகளாக அணிவகுத்துக் கூறுவது புராண மரபு. கதைகளை உள்ளவாறு நம்புவது பௌராணிக மதம். ஞான நூலாராய்ச்சியுடையார் புராணக் கதைகளின் நுட்பமுணர்ந்து இன்புறுவர்; ஏனையோர் இடர்ப்ப டுவர்.