அருணெறி என்று ஒரு நெறி நமது நாட்டில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. அந்நெறி நாளுக்குநாள் பலதிறப் பெயர்களைப் பெற்றுவிட்டது. காலதேச வர்த்தமானத்துக் கேற்பப் பலதிறப் பெயர்கள் பிறப்பது வழக்கம். அப் பெயர்கள் மீது மட்டுங் கருத்துச் செலுத்துவது அறியாமை. அதனால் இடரும் விளையும். அப் பெயர்களின் பொருள்மீது கருத்துச் செலுத்துவதே அறிவுடைமை. பொருள் ஒன்றே. ’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்றார் திருமூலரும். தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நிலவிவரூஉம் அருணெறிக்கு முதலாசிரியர் யாவர்? கல்லால மரத்தடியில் வீற்றிருந்தருளும் தட்சணாமூர்த்தியே அந்நெறிக்குத் தோற்றுவாயாக நிற்பவர். இம்மோனஞான மூர்த்தியால், அருணெறி, சனத்குமாரர் உள்ளிட்ட நால்வருக்குச் சின்முத்திரை வாயிலாக அறிவுறுத்தப் பட்டது. இந் நால்வர்வழிப் பற்பலர் வாயிலாக அருணெறி உலகிடை வளர்ந்து வரலாயிற்று. இவ்வரலாற்றைத் திருவருள் ஞானங் கைவரப் பெற்ற பெரியோர் நன்கு விளக்கியிருக்கிறார். பன்னிரு திருமுறை, பதினான்கு சாத்திரம், தாயுமானார் பாடல் முதலிய நூல்களை ஆராய்ந்து பார்க்க.