மாலை நேரம். கடல் காற்று ’ஜில்’ என்று வீசிக் கொண்டிருந்தது.பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது அந்தக் காற்று ஒன்றுதானே! ஆகையால், அதை வாங்குவதற்காகக் கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் மோஹன், கடற்கரை மணலில் பாதி தூரங்கூட அவன் போகவில்லை. அதற்குள் தூரத்தில் வந்துகொண்டிருந்த இரண்டு குதிரைகளை அவன் பார்த்து விட்டான்.குதிரைகள் இரண்டும் சும்மா வரவில்லை. ஒன்று, ஒரு பையனை முதுகில் ஏற்றிக்கொண்டு வந்தது. மற்றொன்று ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு வந்தது. ’ஜாம், ஜாம்’ என்று அந்தக் குதிரைகள் வருவதைக் கண்டான் மோஹன்; அப்போது அவனையும் அறியாமல் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது.