’கதை’ என்று சொன்னதுமே, சிறுவர்களின் மலர் முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. இனிக்க இனிக்க அவர்களுக்குக் கதை சொல்லி இன்பம் பெற்ற பாட்டிமார்களின் எண்ணிக்கைக்குத்தான் கணக்குண்டா? பரம்பரை பரம்பரையாக வந்த கதைகளைத் தான் காது வழியாகக் கேட்டு, வாய் வழியாகப் பேரக் குழந்தைகளுக்குப் பாட்டிமார் கூறிவந்தார்கள்.இங்ஙனம் கூறப்பட்டுவந்த கதைகளை, ’அழிந்து போகாமல் காப்பாற்றவேண்டுமே’ என்ற ஆசையில் அவற்றையெல்லாம் திரட்டித் தொகுத்தார்கள் சிலர். தாங்களாகவே சில கதைகளைக் கற்பனைசெய்து, அவற்றைக் குழந்தைகளிடத்திலே கூறிவந்தார்கள் வேறு சிலர். இன்னும் சிலர், அவ்வப்போது பல கதைகளை நாட்டு மக்களிடம் கூறி, அவர்களை நல்வழிப் படுத்திவந்தார்கள்.இவ்வாறு கூறப்பட்டுவந்த கதைகள் அந்தந்த நாட்டு எல்லைகளைக் கடந்து, மலைகளைக் கடந்து, கடல்களைக் கடந்து உலகமெங்கும் பரவி, ஆங்காங்கேயுள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டி வருவதை இன்று நாம் காண்கின்றோம். சாகாவரம் பெற்ற அக் கதைகளைத் தந்த ஆசிரியர்களைப் பற்றிக் குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.