குழந்தைக் கவிஞர் யார் என்று கேட்டால், உங்கள் எல்லோரிடமிருந்து வரும் ஒரே பதில் அழ. வள்ளியப்பா என்பதுதான்! ஏனென்றால் உங்களுக்கெல்லாம் அவரை நன்றாகத் தெரியும். அவர் தமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தை எல்லாம் உங்களுக்காகவே ஒதுக்கி வைத்து, உழைத்து வருகிறார்.அவர் இதுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய பாடல்கள் குழந்தைப் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவருகின்றன. நீங்களும் படித்துப் படித்து மகிழ்கின்றீர்கள்.அவைகளில் சிலவற்றைத் தொகுத்து இப்புத்தகத்தை வெளியிடுகிறோம். இதில் கதைப் பாடல்கள் இருக்கின்றன; கருத்துள்ள பாடல்கள் இருக்கின்றன; வேடிக்கைப் பாடல்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எளிய நடையில், உங்களுக்குப் புரியும்படியாக எழுதி இருக்கிறார்.