தமது வாழ்நாளிலேயே ஒரு சிரஞ்சீவிக் கவியாகப் போற்றப்படும் பேறு பாரதியாருக்கும் கிடைக்கவில்லை ; திரு. தேசிகவிநாயகம் பிள்ளையவர்களுக்குக் கிடைத்துவிட்டது. அவர்களுடைய கவிகளையெல்லாம் ஒன்று திரட்டி வெளியிடப் பலர் முயன்றனர். ஆயினும் அந்தப் பாக்கியம் எங்களுக்கே வாய்த்தது.இந்தப் பதிப்பில், பிள்ளையவர்கள் இதுவரையில் இயற்றியுள்ள கவிகளில் கிடைக்கக்கூடியவை யனைத்தும் அடங்கியிருக்கின்றன ; இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவராதவையும் சிலவுள. தமிழன்பர்கள் இவ் வாடா மாலையின் நறுமணத்தை நுகர்ந்து இன்புறுவார்களென நம்புகிறோம்.