காலம் தாழ்த்துவதிலிருந்து மீள்வதற்கும், உங்களுடைய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், அதிகமானவற்றைச் சாதிப்பதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய, என்னுடைய கட்டுரைகளில் மிகச் சிறந்த 30 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து நான் இதில் கொடுத்துள்ளேன். ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கு அவை உங்களுக்கு வழி காட்டும். காலம் தாழ்த்தினால் உங்களால் ஆக்கபூர்வமானவராக இருக்க முடியாது. நீங்கள் ஆக்கபூர்வமானவராக இல்லாவிட்டால், உங்களால் எதையும் சாதிக்க முடியாது. அதனால்தான், காலம் தாழ்த்தும் பழக்கத்திலிருந்து நான் போராடி மீண்ட விதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதுடன் நான் இப்புத்தகத்தைத் துவக்கியிருக்கிறேன். இழப்பு, வேதனை, அர்த்தம் ஆகியவற்றின் ஊடான ஒரு தனிப்பட்டப் பயணம் இது. அதன் பிறகு, அதிகபட்ச உற்பத்தித்திறனுக்கு இட்டுச் செல்கின்ற ஒரு பாதையில் நான் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன். நம்முடைய காலம் முடிவதற்குள் நம்முடைய உச்சபட்ச ஆற்றலை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அது உதவும்.